காலம்தாழ்ந்த பயண`க்குறிப்பு

*

எல்லையை கடக்கும் முன்பே மழை பொழிய ஆரம்பித்தது, மழையில் பயணம் தொடர்ந்தது, பேருந்து நிலையத்தின் வெளியே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். பயணசீட்டு கொடுக்கவில்லை காசுமட்டும் வாங்கிக்கொண்டார் நடத்துனர் அனைவரிடத்திலும். எங்கும் பார்க்கினும், மரங்கள் , பசுமை என்று அழகாக காட்சிக்கொடுத்து கொண்டிருந்தது பேருந்து சன்னல், ஊர்கள் தோறும் பெரிய வீடுகள் அதை சுற்றி செடிகள் வைப்பதற்கு இடம் என்று அவர்களின் வசதியை காட்டியது, முன்பு பலமுறை வந்திருந்தும் கூர்ந்து கவனிக்க தவறியது இது, சிந்தனைகள் திடமாக இல்லாமல் மாறிக்கொண்டே இருந்தது தடுமாற்றத்திர்க்கான காரணமும் புலப்பட்டது போல தோன்றியது, வெளியில் தெரியும் பெயர் பலகை எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன் மிக சிலவற்றை சரியாகவும் படித்ததாக ஆங்கில பெயர்களை வைத்து அறிந்துக்கொண்டேன்.

ஓட்டபாலம் பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும் என்று பார்த்தால் இரண்டு நிமிடத்துக்குள்ளே மீண்டும் பேருந்தை இயக்க ஆரம்பித்துவிட்டார், இதே போல் அடுத்த இரண்டு சற்று பெரிய ஊர்களிலும் செய்தார், வெளியில் பார்த்துக்கொண்டே செல்லும்பொழுது சிந்தை எங்கெங்கோ சென்றுக்கொண்டிருந்தது சில நேரம் வெளியே வேடிக்கை பார்ப்பதிலும், சில நேரம் என்னையறியாமல் வந்து சென்ற பழைய பயணங்களிலும் அதன் மூலத்திலும், எழுத்துக்களை கூட்டி படிப்பதிலும் சில நேரம் மௌனமாகவும் அலைகள் போல் வந்துக்கொண்டே இருந்தது. ஊர் வந்தவுடன் பெரும்பாலானோர் முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டனர் நான் எங்கு இறங்குவது என்று தெரியாமல் யாரையும் கேட்காமலும் வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டேன். அடுத்த நிறுத்தம் வந்தது, பேருந்து நிலையம் போல் தோன்றியது அங்கே இறங்கி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கமாக நடக்க தொடங்கினேன்.

சில நிமிடங்களிலே இரண்டு வாரணங்கள் தெரிந்தது, சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் என்று உறுதிபடுத்தியது. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது, அரிதாரம் பூசியிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வரிசையாக சென்றுக்கொண்டிருந்தனர்.
கையில் புல்லாங்குழல், நெற்றியில் மயிலிறகு அல்லது கைகளில் சிறு விளக்கு வைத்துக்கொண்டு ஊர்வலம் சென்றனர், சிலர் நடனமாடிக்கொண்டு சென்றனர் அவர்களுக்காக வாத்தியங்களும் இசைக்கப்பட்டது, உரியடி திருவிழாவும் நடந்தது, உரியடி வீரர்கள் மீது தண்ணீர் அடிக்க ஆரம்பித்தவுடன் அவர்களை சுற்றி சிறிய வட்டமாக இருந்த கூட்டம் மெல்ல மெல்ல பெரியவட்டமாக நீண்டுக்கொண்டே சென்றது, பெண்கள் பெரும்பாலும் ஒரே போல் உடை அணிந்திருந்தனர் கரையின் நிறம் மட்டும் வேறு நிறங்களில் இருந்தது , ஆண்களும் அதே போலவே ஒரே மாதரி உடையுடன் வலம்வந்தனர்.

காபி குடிக்க வந்த பாதையிலேயே சற்று பின்செல்லவேண்டி இருந்தது, மீண்டும் திரும்ப கூட்டம் அதிகமாகி இருந்தது, பொருட்களை வைத்துவிட்டு கூடத்தில் நின்றேன், நெடு நேரம் சென்று கூப்பிட்டனர் , கட்டாயம் சட்டையை கழட்டவேண்டும் என்று ஒரு சிறுவன் கூறினான் , அதை செய்தும் பனியனும் கூடாது என்றான் , கழட்டிய பின்னே உள்ளே அனுமதி கிடைத்தது எங்கெங்கோ சென்று தான் உள்ளே செல்ல இயலும் என்று நினைத்தது தவறாக முடிந்தது, உள்ளே நுழையும் பொழுதே வாத்தியங்கள் முழங்க மூன்று வாரணங்கள் நின்றுக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது, இன்னும் உள்ளே செல்ல எதையோ அடுப்பில் வைத்து சுட்டுகொண்டிருந்தார்கள் அது குழிபணயாரம் போன்று இருந்தது, அதையும் தாண்டி உள்ளே செல்ல, தூரத்தில் இருந்தே நேராக பார்த்துக்கொண்டு சென்றேன் நெருங்கியதும் சில நொடிகள் கூட நிற்க விடவில்லை, இதை பார்க்கவா இங்கே வந்தேன் என்றால் ஆம் அல்லது அதை காரணமாக வைத்து அந்த இடத்தை பார்க்கவந்தேன் என்றே தோன்றியது, எஞ்சிருந்த நம்பிக்கையை தன்னகத்துள் எடுத்துக்கொண்ட இடம் , அது சரியா தவறா என்று எனக்கு ஆராயும் பக்குவவும் இல்லை ஆனால் இழப்பு இருப்பதாக தோன்றியது, மெதுவாக நடந்து பின்புறம் சென்றேன் எங்கு காணினும் கூட்டமாக இருந்தது, சிறிது நேரம் ஒரு வரிசையில் நின்றேன் நேரம் ஆக, வேண்டாம் என்று கீழே இறங்கி வந்து வாரணங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கே வந்திருக்க வேண்டும் காலம்தாழ்ந்து வந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தேன், அந்த பகுதிக்கு பயணம் செய்யவேண்டும் என்று நெடுநாட்களாக தோன்றியதால் மேற்க்கொண்ட பயணம், பல பயணங்கள் ஏமாற்றத்தையும் , பல பயணங்கள் மனநிறைவையும் தந்திருந்தன, இந்த பயணம் ஏமாற்றத்தையும் மனநிறைவையும் ஒருசேர தரும் என்று தெரிந்தே தொடங்கிய பயணம் ஆக இது ஒரு சிறப்புபயனமும் கூட என்று கருதினேன், அந்த இடத்தை விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன், அடுத்த ஊர் செல்ல பேருந்து தயாராக இருந்தது.

வெற்றிடமாகிப்போன கடவுள்

*

இறைத்தன்மையை உணர்த்தி இறை தேடிச்சென்ற பொழுதுகளில் உணரமட்டும் முடிந்து காணயியலாது போன காலங்களில். துணைநின்று பயணத்தை தொடர துணை நின்றது இறை, காண எங்கெங்கோ சென்று நிகழ் மற்றும் இறந்தகாலத்தின் நினைவுகளை கனவுகளை அசைபோட்டு அதை உந்துசக்தியாக்கி இறைத்தேடல் தொடர்ந்தது. இறை என்ற ஒற்றை உணர்வு மட்டும் உண்மையில்லை, இறை மறுப்பு / எதிர்ப்பு கூட உண்மையான உணர்வுதான், என்னை பிடித்துக்கொண்ட அல்லது எனக்கு பிடித்த இறையின் நிழலில் முட்களின் மீது விளைவை புரிந்தும் நடந்து மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.

என்னை முழுவதுமாக ஆக்கரமித்து முற்றிலுமாக குழப்பிவித்து, போதையில் தள்ளி எங்கோ சென்றுக்கொண்டிருந்தது வாழ்க்கை . நற்றுனை என நினைத்த காலமும் துணையின்றி போனது. கனவுதேசத்தின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டும். நடுநிசி பயணத்திற்கும் ஒரு குவளை தேநீருக்கும் காலத்தின் பிடியில் அடிமையாக இருந்தேன். தேடலின் துடிப்பில் எங்கோ போய்கொண்டிருக்க. எனக்கும் புரியவில்லை யாரும் இருக்கவில்லை, தனிமையில் என் உலகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்க. காலத்தின் பிடி தளர்ந்து அதன் கால்களால் உதைக்கப்பட்டு கனவுகளை மட்டும் சுமந்து எங்கோ நகர்ந்துகொண்டிருந்தது என் எண்ணங்கள்.

இன்னும் தேடல் பலமடங்கு அதிகரிக்க, சீவன் எங்கோ செல்ல இறை என்னுடனே அடங்கிவிட்டது, சீவனை காணும் முயற்ச்சிக்கு தடைசெய்த மனதில் சீவனின் நினைவுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. நினைவுகளை சிதறவிடாது ஆவணபடுத்தும் முயற்ச்சியில் இறங்கியது மனது. சீவனுக்கும் இறைக்கும் தொடர்பு இருப்பது உண்மை, இறவனைக்கொண்டு சீவனை நோக்கும்பொழுது இறையைவிட மேன்மைக்கொண்டதாக விளங்கும், இறையை இயன்றளவு கட்டிக்கொண்டு செல்ல, பயண காலத்தின் அளவு கூட கட்டில் தளர்வு விரிவடைந்துக்கொண்டே செல்ல, இறை இல்லாமல் போனதற்கான அறிகுறிகள் தென்படும். மகிழ்ச்சியில் பயணம் தொடர ஆழ்மனதில் அடைக்கப்பட்டு வைத்திருக்கும் இறை காலம் தோதாக இருக்கும்பொழுது அவ்வபோது உணர்த்திவிட்டு செல்லும்/ சொல்லும் சில நிமிடங்கள் தன்னை மறந்து இறையின் மடியில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் மனது.


நிமிடங்கள் கரைவில் இறையின் சுவடுகள் வெற்றிடமாகி போகும். வெற்றிடத்தின் பிடியில் சிக்கி கால்கள் தானாக நடிநிசி பயணத்தை தொடரும், ஒரு கோப்பை தேநீரும் அதற்க்கு துணைநிற்கும். வெற்றிடமாகிப்போன கடவுளின் பிடியில் மனது சிக்கி நிற்க, சீவனை காண மனது ஏங்கி நிற்கும்.

காட்சிப்பிழை


தேடலை விடுத்தேன்
கிடைத்தும் கிடைக்காது போன
என் கனவு தேசம்


-*-

எட்டிவிடும் தூரம்
இருந்தும் மனமில்லை
முகவரி தொலைத்த
நினைவுகளால்

-*-

நினைவு மங்கி கிடக்கிறது
கடக்க மறுக்கும்
கால்களுக்கு இன்னும்
தெரிகிறது.


-*-

இன்பமான துன்பத்தின்
இறகு முளைக்காத
நினைவுகளின்
ஊர்வலம்
எனக்கென்ன
நான் பார்வையாளன்
வெறும் பார்வையாளன்
இனியொரு ஊர்வலத்தை
கானயியலாத பார்வையாளன்


-*-

காட்சிகளை பிழையாக்கி
வெற்றிக்களைப்பில் சென்ற
காலங்களில்
தேடிப்பார்த்தும் கிடைக்கா
இனிமை

-*-

யாமும் போயிற்று

*

அனைத்திலும் யாம்
எம்மிருப்பு உறுதியாயிற்று
ஊனுடலில் யாமில்லை
எமக்கும் ஊனுடலும்மில்லை
சுவாசத்தின் சுவாசமும் யாம்

சதை எலும்புக்கு
மலர்தூவி
எம்மை தொலைத்து
எம்மை நினைப்பீர்

புதுவழி உருவாகி
மூலமாக யாம்
எம் விருப்பமின்றி

அருவத்தின் அருமை
அருமை
புதிய பாடம்
தொடங்கிற்று

யாமை யாமொலித்து
யாமும் போயிற்று

மீண்டும் ஒரு மழைக்காலம்...

*

தோணிற்று அவ்வாறு தோனுமென்று, தனித்து சென்றால் தாளாது என்று பல விழிகளின் நடுவில் விழிகள், தோணியது நிரூபிக்க கூட்டம் சரிதானென்று சாதித்த நானின் நான். பின்னிரவு தேநீரகத்தை நோக்கிய கால்கள். விழி மூடவிடா உதவிய இமைகள், எதோ மாற்றங்கள் புரியவில்லை நாட்களின் கடத்தலில் சுருதி குறைந்திருக்கும் என்ற எண்ணம் தவறியதை உணர்த்திய நிலவு, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே பிடித்ததினால் கேட்காது பிடிப்பதினால் பிடித்திருக்க செய்தது, மீண்டும் பார்க்க மனம் உந்த. சில திங்களுக்குள்ளே தனிமையில். மழைகாலத்தில் நடுநிசியில் வீட்டை நோக்கி நடக்க மறுத்த கால்கள், தேநீரகத்தை நோக்கி நடந்தது.

மறந்துவிட்ட அல்லது மறைத்துவைத்த சாட்சியங்கள், தோண்டியெடுக்க நேரம் அமைந்து, மகிழ்ச்சியின் நடுவில் எதிர்வினையாற்றிய மனது. சிலவரிகளின் நினைவில் சில்லிட்ட மனது, எங்கோ எதோ ஒரு உணர்வு, சிலநொடிகளிலே ஊனில் எங்கெங்கோ பயணித்திருக்க, உணர்வை மொழியாய் குணரும் முயற்ச்சியில் தோற்ற தோல்விகள். அதிர்வுகளின் ஆழத்தில் புதைந்திருக்கும் வித்துக்களை மீண்டும் காண மனம் உந்தி வித்துக்கள் சில தினங்கள் வானவில்லாக பயணித்தது, எங்கோ வசந்தகாலத்தில் ஆரம்பித்த மழைக்காலத்தின் சுவடுகள் ஆங்காங்கே சிறு செடியில் கீறல்களாய் மரமாய் வளர்ந்த பிறகும் தெரிந்த சாட்சியம். சாட்சிகள் காலவெள்ளத்தில் கரைந்துவிடுவதில்லை, மூழ்கித்தான் செல்கிறது அதன் ஆழத்தை தொட உந்துதல் கிட்டும்பொழுது சாமர்த்தியத்தாலும் தப்பிக்கயியலாது.

எது துவங்கி வைக்கிறது என்று தெரியவில்லை, யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, தெரிந்திருந்தால் ஊனுள்ளே ஓரதிர்வும் உருவாகா, ஒத்திசைகள் நேருகின்றது சில சமயம் நேரெதிர் திசைகளில் பயணிக்கிறது, காலங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட உணர்வுகளின் சங்கமம்தான் ஆழ்கடலின் ஆழத்தை ஒத்து புதைந்திருக்க காரணகர்த்தா. தொடக்கத்தில் வெளிகுனரும் முயற்சிகள் வெற்றிப்பெற்று போக போக தோல்விகள் சரியான சாதக நிலை எட்டாத வரை எட்டினாலும் சிலதிங்கள் மருவி சிலமணித்துளிகள் என்று கரைந்துவிடுகிறது. பொய்யின் சங்கமிப்பு என்று முடிவிடும் தருவாயிலும் மௌனமே மிஞ்சும், எதிர்பாரா தருணம் எங்கென்று பாராது தோன்றும். பதிலிராது நமக்கு. பதிலை பார்த்து வருவதில்லை ஆனால் நமக்குத்தான் புரிவதில்லை.

வலுவுள்ளவரை அல்லது வரும்வரை வரட்டும் எதிர்கொள்ளத்தயார் என்றுரைத்தாலும். முற்றிலும் என்னைவிட்டு விலகிவிடு அல்லது முழுவதுமாக என்னை ஆட்கொண்டுவிடு ஆட்கொள்வது என்பதும் அழித்துவிடு என்பதும் ஒன்றுதான், எதிர்திசை பதில்கள்தான். காத்திருந்த பொழுதுகளில் துளிகளின் சத்தமோ அல்லது இசையோ கேட்கவில்லை. இனி வரும்பொழுது கேட்கருக்கிறேன் முடிவான பதிலொன்றை, பதிலிராது என்று தெரிந்தும்.

காத்திருக்கிறேன்..


மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக.....

இரவல் கனவுகளின் வெற்றி

*

பொதியாய் பல வருடங்கள்
சுமந்த
என் கனவுகள்

இரவல்
கனவுகளுக்காக
பொறியியல்

ஆசை கனவுக்காக
தூக்கி எறியப்பட்ட
பொதி

இரவல் கனவுகள்
பெற்ற வெற்றி

ஆசைக்கனவுகள்
இன்று பொதியாய்

என் அனைத்து கனவுகளையும்
இழந்துவிட்டு
அனாதையாக நான்

கால்கள் போனப்பாதை

*

கால்கள் போனப்பாதையில் நடக்கையில். சொர்கத்தின் வாசலாக காண்பித்து நரகத்திற்கு வழி இருந்தது, வழி எங்கே செல்கிறது என்று பார்க்க பயணம் தொடர்ந்தது புதுவித உணர்வு புதுவித அனுபவம் சுகமாகவும் இருந்தது. சொர்க்கம் தெரிவதுபோல் கானல்நீராக தொடர்பயணம். ஒரு கட்டத்தில் பயணத்தை நிறுத்தி திரும்ப தோன்றும் மறுகணமே வேண்டாம் வந்தது வந்தாதகிவிட்டது முடிவையும் காண்போம் என்று தோன்றும். மனபோராட்டங்களுக்கு இடையில் பயணம் இனிதே தொடர்ந்தது. தொடக்கத்தில் பசுமையான தேசத்திற்குள் செல்ல. மனம் பரவசபட்டது வந்தது சரிதான் என்ற மனம் கூறிக்கொண்டது தொடர்ந்து செல்ல பசுமை சிறிது சிறிதாக மறைந்து தொடரோட்டம் போல் தோன்றியது. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு அனுபவம் சரியோ தவறோ அனுபவம் மிஞ்சும். அனுபவத்தை வைத்து என்ன செய்வது ? மீண்டும் ஒரு பயணம் ? வேண்டாம் இதுவே போதும் இன்னும் முடிவே தெரியவில்லை இன்னும் இந்த உடலில் உள்ளத்தில் உந்துதல் இருக்கும் வரை தொடரட்டும் என்று தொடர்ந்தது.

முடிவரியா பயணம் தொடங்கி முடிவை முடிவுசெய்து பிறகு தவறென திருத்தி எழுதி இந்த பயணம் தொடர்கிறது. எதற்க்காக இந்த பயணம் ? எதோ தோனிற்று தொடங்கினேன் இதோ செல்கிறது, முடிவு செய்து தொடங்கவில்லை ஆனால் முடிவு தெரிந்து தொடர்ந்தேன். பயனற்ற பயணத்தில் பயண நேரம் வீணோ என்று தோன்றவில்லை. உண்மையான வாழ்க்கையை சந்திக்க முன்கூட்டியே தனிவகுப்பாக அந்த பயணம், மழைக்காலத்து நடுநிசி பயணம், இதமான குளிர் ஒரு தேநீருக்காக ஏங்கியது. தொடர்ந்தது சிலகாலம், வானிலை மாற்றத்தில் தொலைந்தது பொருள், உணர்வற்ற தேநீர் உயிரற்ற குளிர் இதற்க்காக நான் ஏன் பயணத்தை தொடரவேண்டும். அழகு சொற்க்களை நிரப்பி பொருளில்லா பாடல் எழுதுவதுபோல தொடர எனக்கு விருப்பமில்லை அல்லது பொருளற்ற பயணத்தில் எது நிறைவு ? பயணம் முடிந்துவிட்டதாக நான் அறிவிக்கவில்லை ஒரு காற்புள்ளி மட்டுமே வைத்துள்ளேன் அதற்க்கு தொடரும் என்று அர்த்தமாகாது முடிவு என்றும் அர்த்தமாகாது. அது அப்படியே இருக்கட்டும் முடியா தொடர்போல,

நிழலின் நிழல்

*

நிசத்தின் நிழலின்
நிழலில் நிசம்
பகலில் நிசம்
இரவில் நிழல்

பருவமாற்றத்தில்
காணமல்போன
நிழலின் நிசம்

நிசமில்லா நிழலில்
நீங்கமுடியாத
நிழலின் நிழல்

மீதமிருப்பது
நிழலா நிழலின் நிழலா ?
தெரியவில்லை

*

மும்பை - சென்னை - கொல்கத்தா

*

எங்கவூட்டு திண்ணைல குந்திகினிங்க
எங்காத்து விருந்தாளின்னு சொல்லிகினிங்க
எங்கூட்டு சோத்த மொதல தின்னுகினிங்க
இப்ப சப்பாத்திதான் புடிக்குதுன்னு சொல்லிகிரிங்க

கூரையபிறிச்சி மாடியாக கட்டுரனிங்க
உங்களதானே நம்பி என்கூட்ட தந்தோமுங்க
விதவிதமா கட்டி கட்டி வியக்கவச்சிங்க
வீட்டுக்குள்ள நுழையுரப்ப எட்டிவுதக்குறிங்க

எங்கூட்டு சாதிசனம் வந்துனிக்கைல
எடுபுடி வேலைக்கூட எங்களுக்கிள்ளிங்க
என்கூடுதானே என்று எதித்து கேட்டாக்க
தேசியம்ன்னு என்ன என்னம்மோ மிரட்டுறிங்க

என்கவூடு எங்களுக்குன்னு சொல்லக்கூடதாங்க ?
எந்த ஊட்ட என்கவூடுன்னு நாங்கசொல்லுரதுங்க ?
உங்கவுணவ எங்களையும் திங்கசொல்லுரிங்க
என்கவூட்டுலஇருந்துக்கினு அத இன்னாத்துக்கு திங்கோனுங்க. ?

எங்க நீங்க போனாலும் அவங்க மாறோனுமுங்க
நீங்க மட்டும் எப்பொழுதும் மாறமட்டிங்க.
நீங்க கூத்தடிச்சி எங்க கலாச்சாரத்த சிதசிடுவிங்க.
எதுத்து கேட்டா கூடிநின்னு கும்மியடிக்குரிங்க.

இப்பகூட ஒன்னும் கெட்டுப்போகலிங்க
எங்கூட்டுல நல்லா வந்து குந்திகிடுங்க
சோறு போடும் பூமி உணவ தின்னுகிடுங்க பொறவு
நீ வேற நான்வேரன்னு நினைக்கமிடமில்லிங்க.

*

வெண்புறா

*
ஐந்து நிமிடத்தில் தொடரூந்து வரவிருக்க, தொடரூந்தை பிடிக்காவிடில் கிளாங்கில் இறுதி பேருந்து பிடிக்க சிரமமாகிவிடும் என்ற நிலையில், குடிநீர் குடிக்காமல் ஒரு அடிக்கூட நடக்கயியலாது என்று முடிவாக கூறிவிட்டார் முகவைக்கரர், வேறுவழியில்லாமல் குடிநீரை தேடி கே.எல் சென்ட்ரலில் அலைந்தோம், ஒரு வழியாக ஒரு கடையில் குடிநீர் வாங்கி முகவையாருக்கு கொடுத்துவிட்டு அறிவிப்பு பலகையை பார்க்க ஒரு நிமிடத்தில் தொடரூந்து வருவதாக தெரிந்தது. பயணச்சீட்டை எந்திரத்தில் காட்ட எனக்கு வழிகிடைத்தது, ஆனால் ஜெகுக்கும், முகவையாருக்கும் எந்திரம் வழிவிட மறுக்க, காவலர் உதவி புரிந்தார்.

அவசரமாக கீழ்தளத்திற்கு இறங்கி தொடரூந்து அறிவிப்பு பலகையை பார்க்க இருபது நிமிடங்கள் கூட்டப்பட்டிருந்தது. வண்டிக்கு காத்திருந்த அனைவரின் முகத்திலும் ஏமாற்றம். முகவயாரை காண திரும்பிய பொழுது அழகியபாதங்களை ஒவ்வொரு படியாக வைத்து சிறு புன்னகையுடன் மேகத்தை உடையாக அணிந்து ஒரு வெண்புறா வர, கேமரனின் குளிர்காற்று துமியோடு கே.எல் சென்ட்ரல் கே.டிஎம் நடைமேடையில் வீசியது.

தண்ணீ குடிக்கலைனா தலைவலி வரும் என்று தன் பலவருட ஆராச்சியின் முடிவை அந்த நடைமேடையில் வெளியிட்டு தொடர்ந்து பேசினார் முகவையார். ஆனால் எனது எண்ணம்,கவனம் அந்த வெண்புறா எதிர்திசையில் செல்லும் தொடரூந்து மேடைக்கு செல்லக்கூடாது என்றுதான் இருந்தது, அந்த சிறிய பாதங்கள் நாங்கள் காத்திருக்கும் தொடரூந்து நடைமேடையை நோக்கி வந்து எங்களுக்கு சற்று அருகாமையில் நின்றது. தொடரூந்து வருகிறதா இல்லையா என்பதை பார்ப்பது போல அது இருந்த திசையை நோக்கி அடிக்கடி பார்த்தே பதினைந்து நிமிடங்கள் செல்ல, தொடரூந்து வருவதற்கான நேரம் இன்னும் இருபது நிமிடங்கள் கூட்டப்பட்டது, இன்று பேருந்தை பிடிப்பது கடினம்தான் என்று எண்ணினாலும், வெளியில் இருந்தபொழுது ஏற்பட்ட பதட்டம் அப்பொழுது இல்லை, வேகவேகமா கூட்டிட்டு வந்திங்களே இப்ப என்னாச்சி என்று கடிந்துகொண்டார் முகவையார். ஆனால் சில நிமிடங்களிலேயே தொடரூந்து வந்துவிட்டது.

நாங்கள் தொடரூந்தின் கதவை நோக்கி செல்ல முதல் வாயில், வெண்புறாவின் அருகில் இருக்க, நான் அங்கே நின்றுக்கொண்டேன், ஆனால் முகவையாரும் ஜெக்கும் தங்களை வயதானவர்கள் என்று நிரூபிக்க என்னையும் வெண்புறாவையும் தாண்டிச்சென்று அடுத்த வாயிலில் ஏறிக்கொண்டனர். உள்ளே ஏறியதும் ஒரு இருக்கை எனக்கு கிடைக்க மற்ற இருவரும் இருக்கை கிடைக்காமல் என்னை நோக்கி வந்தனர், என்னருகில் இருந்த மற்றொரு இருக்கையில் ஜெக் அமர்ந்துக்கொள்ள முகவையார் நின்றுக்கொண்டு வந்தார், வயதானகாலத்தில் நிக்காதிங்க இங்க அமருங்கள் என்று நான் கூறியும் அவர் அமரவில்லை, அமராததிலும் ஒரு வசதி, இடது கதவோரம் அமர்ந்திருந்த வெண்புறாவை காண சுலபமாக இருந்தது, ஆனால் வெண்புறாவுக்கு அருகில் அமர்ந்திருந்தவர் வெண்புறாவை மறைத்தவாறு இருந்தார், முகவையாரின் மொக்கைகளை கேட்டுக்கொண்டே வெண்புறாவை பார்த்துக்கொண்டே சென்றேன்.

சுபாங் ஜெயாவில் பலர் இறங்க முகவையாருக்கு ஒரு இருக்கை கிட்டியது எங்களை விட்டு சற்று தள்ளி, அதே சமயம் வெண்புறாவின் அருகிலும் ஒரு இருக்கை காலியாக இருந்தது அங்கு சென்று அமர்ந்துவிடலாமா என்று என்னிக்கொண்டிருக்கும் பொழுதே ஒருவர் அங்கு சென்று அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் என்னருகில் ஒரு இருக்கை காலியாக முகவையாரை அழைத்து என்னருகில் அமர சொன்னோம், முகவையார் வந்தபிறகு இடதுபக்கம் பார்த்தால் வெண்புறாவின் இருக்கை காலியாக இருந்தது, வயதான மனிதரை இங்கு அமரவைக்க போய் வெண்புறாவை விட்டுட்டமே, இப்ப எங்க தேடுறது யார கேக்குறது என்று மனம் என்னக்குள்ளே கேட்டுக்கொண்டது, ஆனால் சிறிது நேரத்தில் வெண்புறா அமர்ந்திருந்த இருக்கைக்கு வலபக்க இருக்கைக்கு பின்னல் வெள்ளையுடை அணிந்த புறா இருப்பது தெரியவர குளிர் தாளாமல் வெண்புறா பறந்து பின்னிருக்கைக்கு சென்றிருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டோம், ஆனால் தனியாக வந்த வெண்புறா அருகில் அமர்ந்திருக்கும் மலாய் புறாவிடம் பேசிக்கொண்டு வருவதை பார்த்து சற்று சந்தேகம் எழுந்தது, நான் தேடும் வெண்புறாதானா இது என்று சந்தேகம் வர அடுத்த நிறுத்தத்தை பார்ப்பது போல் நடந்து சென்று பார்க்க சரியாக தெரியவில்லை. நாங்கள் வர இருபது நிமிடம் ஆகும் அதற்குள் தொடரூந்து நிறுத்தத்துக்கு வந்துவிடுங்கள் என்று எங்களை கொண்டு வந்து விட்டவருக்கே அழைத்து கூற அவர் நிலையத்திற்கு வந்துவிடுவதாக கூறினார்.

ஆனால் அதற்க்கு அடுத்த நிறுத்தத்தில் வேறு புறா அங்கிருந்து பறந்து செல்ல முகவையாரும், ஜெக்குவும் என்னை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள், வயதானவர் முகவையார் என்று நான் பலமுறை உண்மையை கூறியதற்கு அந்த பெரியவர் அப்பொழுது பழிதீர்த்துக்கொண்டார். போகட்டும் அதில் துளியும் வருத்தமில்லை ஆனால் எப்பொழுது அந்த வெண்புறா பறந்தது என்றுகூட பார்க்கவில்லையே என்ற எண்ணம்தான் என்னை திட்டிக்கொண்டு இருந்தது. புகிட் படாக் கடந்ததும் மூவரும் கதவின் அருகினில் வந்து நின்றோம் அது வெண்புறா அமர்ந்திருந்த இடத்துக்கு மிக அருகில் இருந்தது, முகவையாரும், ஜெக்கும் இன்னும் பலமாக என்னை ஒட்டிக்கொண்டிருன்தனர், கிளாங் நிறுத்தத்தை நெருங்கியவுடன் சிறு புன்னகை மற்றும் பொய் கோபத்தோடு வெண்புறா முன்பு அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னாலிருந்து எழுத்து வர மூவரும் மௌனமாகினோம். தமிழ் புறா என்பதால் நாங்கள் பேசிய அனைத்தும் புரிந்திருக்கும் ஆகவே அந்த சிறு புன்னகை மற்றும் பொய் கோபம் புறாவிடமிருந்து.

எங்களை கடந்து வெண்புறா சென்றாலும் பயணசீட்டை எந்திரத்தில் காட்டிவிட்டு நிலையத்தின் வாயிலிலே நின்றுக்கொண்டது, டேக்சிகாரர் வந்திருக்ககூடாது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே தோ வந்துட்டேன் என்பது போல கையை உயர அசைத்தார், வேண்டுமென்றே மெதுவாக திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே டேக்சியை நோக்கி நடக்கம் வெண்புறா இன்னும் நிலையத்தின் வாயிலிலேயே நின்றிருந்தது, வண்டி கிளாங் தொடரூந்து நிலையத்திலிருந்து கிளாங் பேருந்து நிலையத்தை நோக்கிசென்றது.

அப்பொழுதும் வெண்புறா நிலையத்தின் வாயிலில் ஒரு இருக்கையில் அமர்ந்து எங்கேயோ பார்த்துகொண்டிருந்தது.....

குறிப்பு : இந்த ,மொக்கை `ஒரு தமிழனின் குரலு`க்காக கட்டாயத்தின் பெயரில் எழுத்தப்பட்து.