இயல்பு !

*
ஒரு
குவளை பாலில்
ஒரு துளி
குருதி

மெல்ல பாலினூடே
சென்று தரையை
தொட முயற்சித்து
முடிந்தளவு
பாலின் நிறத்தை
மாற்றி தரையை
தொடாது பயணம்
முடிந்தது

எதன் பொருட்டும்
வருத்தம் கொள்வது
பிழையாகிவிடும்
இரண்டும்
தன் இயல்பைதானே
வெளிக்காட்டியது...

சில கொலைகளை செய்யவேண்டும் !!!

*

கிறுக்கிக்கொண்டிருக்கும்
நினைவுகளையும்
உணர்வுகளையும்
இரக்கமற்ற எண்ணங்களையும்
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

மேலும்

சில கொலைகளை
செய்யவேண்டும்

ஒரு செயலை
ஒரு தவறை
ஒரு மன்னிப்பை

ஆயுதம் கிடைத்தால்
தாராளமாக கொடுங்கள்
உங்களுக்கு சன்மானம்
கொடுக்கப்படும்

எதையாவது எழுத வேண்டும்...

*

எழுதிவிட வேண்டும்
ஒரு கவிதையேனும்
அல்லது சொற்குவியலில்
ஒன்றை

எதையோ எழுத நினைத்து
எதைப்பற்றியாவது எப்படியாவது
எழுதிவிட வேண்டும்

இரண்டு கவிதைகளையும்
ஒரு கோப்பை தேநீரையும்
காலை உணவாக எடுக்க
நினைத்ததை...

முகமுடிகள் கழற்றிவிட்டு
ஒரு முழுநாள்
இருக்க
நினைத்ததை...

மழலைகளின்
பால்மனத்தையும் சொற்களையும்
சேகரிக்க
நினைத்ததை...

மனம் பிறழ்ந்தவனின்
அருகில் அமர்ந்து
அவனுடன் உரையாட
நினைத்ததை...

இன்னும்... இன்னும்....
நினைத்தது அனைத்தையும்....

சொற்களை தேடி
தேர்ந்தெடுத்து விட்டேன்
மயிலிரகுக்காக காத்திருக்கிறேன்
தானாக உதிருமென்று....